நிலம் கையகபடுத்துதல் சட்டம் என்பது மக்களுக்கெதிரான மோசடி சட்டமா?

Monday, 27 October 2014

நிலம் செல்வத்தின் தாய், உழைப்பு அதன் தந்தை” என்று வில்லியம் பெட்டி என்ற பொருளியல் அறிஞர் சொன்னதை காரல் மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் மேற்கோள் காட்டியிருப்பார். அதாவது இயற்கையின் கொடையான நிலமும், மனிதனின் உழைப்பும் சேரும்போதுதான் உற்பத்தி செய்யப்பட்ட செல்வம் பிறக்கிறது. ஆகவே செல்வத்தின் முக்கியமான கண்ணாக நிலம் திகழ்வதை அறியலாம்.
ஏழை மக்களிடம் இருக்கின்ற சிறு, குறு நிலத்தையும் கையகப்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்க வேண்டியே கையகப்படுத்தப்படுகிறது. மேலும், அந்நிறுவனங்களின் தொழில் வளமைக்காக அரசே ‘பொது நோக்கத்திற்கு வேண்டி’ என்ற அடிப்படையில் பெருமளவிளான நிலங்களை கையகப்படுத்தி பெரும்பான்மை மக்களை நாடோடிகளாக மாற்றுகிறது. எனவே, உண்மையில் பொது நோக்கத்திற்காக அரசு நிலத்தைக் கையகப்படுத்தினாலும், அது பெரும்பாலும் தனியார் நிறுவனங்களின் கொள்ளை இலாப வெறிக்கு உரம் சேர்ப்பதற்காகவே செய்யப்படுகிறது. ஆக மொத்தத்தில், நிலம் கையகப்படுத்துதல் என்பதும், அதற்காக இழப்பீடு தருதல் என்பதும் மக்களைப் பொறுத்தவரையில் மிகக் கொடூரமான முறையில் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து உயிர் வாழும் உரிமையையே பறிக்கின்ற செயல்பாடாகும்.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது இப்பொழுது சர்வசாதாரணமாக நடந்துவருகிறது. விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி, அவற்றின் மேல் கொண்டுவரப்பட்டுள்ள விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், தகவல்-தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சுரங்கங்கள், புதிய வேலியிடப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவற்றால் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை என்பதுதான் உண்மை!

அணுசக்தி சட்டம் 1962, தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956, சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் 2005 போன்ற 16 சட்டங்களை இந்தப் புதிய மசோதா தன் வரையரையிலிருந்து ஒதுக்கி வைக்கிறது. எனவே, சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தின் கீழ் நிலம் அபகரிக்கப்படுவது முன் போலவே தொடரும். இதனால் அணுசக்தித் திட்டங்களுக்காகவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும், நெடுஞ்சாலைகளுக்காகவும், தங்களுடைய நிலம் முறையற்று கைப்பற்றப்படுவதை எதிர்த்துப் போராடிவரும் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடைக்காது.

ஏன் இந்த எரிவாயுக் குழாய் திட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். இத்திட்டம் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகிப்பதற்காகப் போடப்படுகிறது.  இந்தத் திட்டத்தால் பலனடையப் போவது பெரும்பாலும் தனியார் முதலாளிகள்தான். நெடுஞ்சாலைகளில் குழாய்களைப் பதிப்பதைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறுக்க முடியுமென்றால், தமது விளைநிலங்களில் குழாய்கள் பதிப்பதை விவசாயிகள் மறுக்கக் கூடாதா? ஆனால், இந்த உரிமை விவசாயிகளுக்கு அநியாயமான முறையில் மறுக்கப்படுகிறது.  மாறாக, பொது நோக்கத்திற்காகக் கொண்டு வரப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டுத் தர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மறுத்துப் போராடினால், காவல், வழக்கு, சிறை போன்ற அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, விளைநிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்துக் கொள்கிறது அரசு.


அரசியலமைப்புச் சட்டத்தில் முன்னதாக வரையறுக்கப்பட்ட குறிப்பு:
a) முன்னதாக, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 31(2)-ன்படி அரசு தனியார் நிலத்தை கையகப்படுத்த முனைந்தால், அதற்கு தனியே சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கையகப்படுத்துவது பொது நோக்கத்திற்காக இருத்தல் அவசியம் என்றும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டது.
b) அதன்பிறகு அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது திருத்தம் 1971-ல் இழப்பீடு என்ற சொல்லாடலை நீக்கி “ஒரு தொகை” வழங்கப்பட வேண்டும் என்று வரையறுத்தது. மேலும் அப்படி வழங்கப்படும் தொகை குறைவாக இருந்தாலும், அதை எந்த நீதிமன்றத்திலும் முறையிட முடியாததாக திருத்தம் செய்யப்பட்டது.
c) அதன்பின், 1978-ல் செய்யப்பட்ட 44-வது திருத்தம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 31(2) மற்றும் 19 (1) (க) போன்றவற்றை நீக்கிவிட்டு, அரசு பொது நலனுக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு நில உரிமையாளருக்கு இழப்பீடு தர வேண்டிய அவசியம் இல்லை என்று திருத்தப்பட்டது.

வளர்ச்சி திட்டங்கள்:
a) அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் மின்சாரம் ஆதாரமாகத் திகழ்கிறது. மின் துறையில் மட்டும் ரூ.7.14 லட்சம் கோடி மதிப்பில் 136 திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக உருக்கு துறையில் 25 திட்டங்கள் (ரூ.3.36 லட்சம் கோடி) நிறைவேற்றப்பட முடியாத நிலையில் உள்ளன.
b) எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விரிவாக்க திட்டங்களின் மதிப்பு ரூ.2.08 லட்சம் கோடியாகும். இதில், கெய்ரன் இந்தியா (ரூ.28,000 கோடி) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ரூ.29,777 கோடி) ஆகிய நிறுவனங்களின் திட்டங்களும் அடங்கும்.
c) கடந்த 2005–06–ஆம் நிதி ஆண்டில் உருக்குத் துறையில் ஆர்செலர் மிட்டல் மற்றும் போஸ்கோ ஆகிய நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தன. நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட பிரச்சினையால் மேற்கண்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இந்த திட்டங்களையும் சேர்த்தால் நிறுத்தி வைக்கப்பட்ட திட்டங்கள் மதிப்பு மேலும் உயரும்.
d) இவ்வாறு திட்டங்கள் முடங்குவதால் நாட்டின் உற்பத்தி துறையில் பாதிப்பு ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி குறையும். சென்ற நிதி ஆண்டில் உற்பத்தி துறையில் 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த நிதி ஆண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்தது.
e) உற்பத்தி துறையின் பின்னடைவால் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் ஆர்டர்களுக்கான பொருள்களை உரிய நேரத்தில் டெலிவரி செய்ய முடியாது. இதன் காரணமாக ஏற்றுமதி குறையும். சென்ற நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 8,800 கோடி டாலராக உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசுக்கு இது சவாலாக உள்ளது.

இவ்வாறாக அனுமதி பெறுவதில் ஏற்படும் கால தாமதம், நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான 319 தொழில்துறை திட்டங்கள் முடங்கியுள்ளன. பிரதம மந்திரியின் திட்ட கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது. இதனால் அதிக இலாபம் ஈட்ட முடியவில்லையே என்று மத்தியில் ஆள்பவர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளார்களாம்.  

நந்திகிராம், சிங்கூர் டாடா நானோ தொழிற்சாலை, ஒரிசா பாஸ்கோ தொழிற்சாலை, ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கவிருந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள்: 
a) மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடாவின் நானோ தொழிற்சாலைக்காக சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் சுமார் 400 ஏக்கர் நிலம் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கையகப்படுத்தப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா நடத்திய போராட்டம் காரணமாக நானோ தொழிற்சாலை குஜராத்துக்கு மாறியது. உண்மையில் டாடாவிடம் இப்போதும் அந்த 900 ப்ளஸ் ஏக்கர் நிலம் அப்படியேதான் உள்ளது. காரணம் அந்த நிலங்களுக்கு இன்று வரை குத்தகை செலுத்தியுள்ளது டாடா நிறுவனம். எதிர்காலத்தில் வேறு திட்டங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தப் போவதாகவும் டாடா கூறியுள்ளது. இந்த நிலத்தை டாடாவிடமிருந்து வாங்கி ரெயில்வேக்கு தரவேண்டும் மம்தா கூறிவந்ததும், அதற்கு மேற்கு வங்க அரசு ஒப்புதல் தெரிவித்ததும் நினைவிருக்கலாம்.

b) தமிழ்நாட்டில் 1990-ல் ஆட்சி செய்த அரசு சென்னையையடுத்து ஃபோர்டு கார் கம்பெனியை நிறுவுவதற்காக, 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்துக் கொடுத்தவர்தான்

c) POHANG STEEL COMPANY (POSCO) என்பதுதான் இதன் சுருக்கம். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு பின்னால் 21 இரும்பு தொழிற்சாலைகளால் 13.5 மில்லியன் டன் இரும்பை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிற நிலையில், ஒரு தனி தொழிற்சாலை எவ்வாறு ஆறு வருடங்களில் 12 மில்லியன் டன் இரும்பை உற்பத்தி செய்ய முடியும்? என்ற கேள்வி எல்லோரடைய மனதில் அப்போது இருந்தது.

d) ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கவிருந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மராட்டிய அரசு. இந்த நிலங்களை விவசாயிகள் இனி தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது. மும்பையில் 35,000 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டம் அமைக்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மராட்டிய அரசு அனுமதியளித்திருந்தது. 45 கிராமங்கள் இந்த பரப்பளவுக்குள் வந்தன. 2009-ம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2009-டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தப் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. கொடுக்கப்பட்ட அவகாசத்துக்குள் திட்டம் நிறைவு பெறாததால் இந்தத் திட்டத்தை ரத்து செய்வதாகவும், இனி விவசாயிகள் தங்கள் நிலங்களை விருப்பபப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இந்த திட்டம் குறித்து ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தியது அரசு. அதிலும் ரிலையன்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலம் வேண்டாம் என்றே மக்கள் தீர்ப்பளித்திருந்தனர். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த மசோதா நிலத்திற்கான இழப்பீடு பெற சரியான ஆவணங்களை வைத்திருக்க வலியுறுத்துகிறது. அப்படி இல்லாதபட்சத்தில் நிலத்திற்கான இழப்பீட்டை அவர்கள் கோரமுடியாது. நம் நாட்டில் கொஞ்சம் நிலம் வைத்திருப்போர் ஆவணங்களை சரியான முறையில் பராமரிப்பது இல்லை. ஏராளமானவர்கள் வெறுமனே அனுபவ அடிப்படையில்தான் நிலங்களை உரிமையாக்கியுள்ளனர். இத்தகையோருக்கு இழப்பீடு பெறுவதும் குதிரைக்கொம்பாகி விடும்.

நிலத்தைக் கையகப்படுத்த ஒரு தனி நபர் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் கூட அதை ஏற்றுக்கொண்டு அவருக்கிருக்கின்ற உரிமையை அங்கீகரிப்பதுதான் அரசின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். இந்த நில அபகரிப்புக்கு எதிராக விவசாயிகள் ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது.  இந்த நெடிய போராட்டத்தில் சிங்குரிலும், நந்திகிராமிலும், நியம்கிரியிலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குக் கிடைத்துள்ள வெற்றிகள் முக்கியமானவை என்ற போதும், அவற்றை தற்காலிகமான வெற்றியே தவிர, இறுதி வெற்றியாகக் கொள்ள முடியாது.  உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று ஒரு காலத்தில் உரிமைக் குரல் கொடுத்தோம். இந்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.

குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள சில முக்கியமான குறிப்புகள் அதாவது வளர்ச்சி திட்டங்கள், போராட்டங்கள் ஆகியவை அவ்வபோது செய்திதாள்களில் படித்தது. அதனால் முக்கியாமானவற்றை குறிப்பிட்டுள்ளேன்.

நன்றியுடன்
 - P.இராஜா

மின்னஞ்சலில் பதிவுகளை பெற
*உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து இதை உறுதி செய்யவும்.*

Post Comment

0 உரமிடுபவர்கள்:

  © www.uzhavan.com 2013

Back to TOP