நியாயமான இழப்பீடு உரிமை-வெளிப்படையான நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுஒப்பந்த சட்டம்

Sunday 11 May 2014

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 1894-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட சட்டம்தான் இன்று வரை அமலில் இருந்து வருகிறது. இந்த சட்டத்தில் நிலம் கையகப்படுத்துதலால் பாதிப்புக்கு ஆளாவோரின் மறுகுடியமர்வு தொடர்பாக ஏதும் குறிப்பிடப்படவில்லை
என்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள், தொழில் திட்டங்களில் பல நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலால் நின்று போய்விடுகின்றன. இதை தவிர்க்க 119 ஆண்டுகளுக்கு முந்தைய நில கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது மத்திய அரசு. இந்த மசோதாவுக்கு நியாயமான இழப்பீடு உரிமை-வெளிப்படையான நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுஒப்பந்த சட்டம்' (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Bill) என்று பெயரிடப்படுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் மசோதா என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இது தொடர்பாக புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 27.8.13-ந்தேதி ஒப்புதல் வழங்கி விட்டார். ஏற்கனவே, 2007-ஆம் ஆண்டிலும், 07-09-2011 ஆம் ஆண்டிலும் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது இச்சட்டம். இப்போது புதிய திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு இந்த புதிய சட்டத்தை ஜனவரி 1,2014 முதல் அமல்படுத்த முடிவு எடுத்துள்ளதால், மாநில அளவிலான நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மறு குடியமர்த்தல் ஆணையம் உள்ளிட்ட 6 உள் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகளை இந்த ஆணையம் கையாளும் எனவும் தெரிவித்தது.

இந்த நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்குப் பெயர்தான் கவர்ச்சிகரமாகச் சூட்டப்பட்டுள்ளதே தவிர, அதற்கும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 119 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருந்துவரும் பழைய சட்டத்திற்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை.  நியாயமான இழப்பீடு உரிமை-வெளிப்படையான நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுஒப்பந்த சட்டம்' (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Bill) என்ற இப்புதிய மசோதா, நஷ்ட ஈட்டைக் கொஞ்சம் கூட்டிக் கொடுத்து விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரித்துக் கொள்வதைத்தான் இச்சட்டத்தில் உள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன? என்ன என்பதை தெரிந்து கொள்ள இதற்கு முந்தைய பதிவை படிக்கவும். இப்போது இந்த மசோதாவில் பாதிக்கப்படும் மக்களுக்கு அவர்கள் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களையும் இழப்பீடு பற்றி கூறியுள்ளதை பார்போம்.

எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்? 
கையகப்படுத்தும் நிலத்துக்கு நியாயமான இழப்பீட்டை 2 ஆண்டுகளுக்குள் கொடுக்கவேண்டும். இந்த மசோதா நிறைவேறினால் தனியார் நிலத்தை, அரசு கையகப்படுத்தும்போது, ஊரகப் பகுதியில் நிலத்தின் மதிப்பில் 4 மடங்கும், நகர்ப்பகுதியில் 2 மடங்கும் இழப்பீடு கிடைக்கும். 66% பேர் ஒப்புதல் இருந்தால்தான் நிலத்தை எடுக்க முடியும் நிலம் தருவோரில் 66% பேரின் ஒப்புதல் இருந்தால்தான் அவற்றை கையகப்படுத்த முடியும்.

விளைநிலைத்துக்கு தடை!
இம்மசோதா நிறைவேறினால் நீர்ப்பாசனம் மிக்க பயிர் சாகுபடி செய்யும் நிலம் மற்றும் விவசாய நிலத்தைக் கையகப்படுத்த அனுமதிக்காது ஆனால். பொதுத் திட்டத்துக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் போது அருகில் உள்ள விவசாய நிலம் எனில் அதையும் கையகப்படுத்த வகை செய்கிறது.

முக்கிய அம்சங்கள்:
நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* கையகப்படுத்தும் நிலத்துக்கு நியாயமான இழப்பீட்டை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்.
* பொது நோக்கத்துக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது அதற்கான சந்தை மதிப்பில் நான்கு மடங்குத் தொகையை ஊரகப் பகுதியிலும், இரண்டு மடங்குத் தொகையை நகர்ப் பகுதியிலும் வழங்க வேண்டும்.
* அரசும் தனியார் நிறுவனமும் இணைந்த திட்டங்களாக இருந்தால், நில உரிமையாளர்களில் 80 சதவீதம் பேரின் சம்மதம் பெற்றிருக்க வேண்டும். தனியார் மட்டுமே செயல்படுத்தும் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் 70 சதவீதம் பேரின் சம்மதம் பெற்றால்தான் நிலத்தைக் கையகப்படுத்த முடியும். என்பது  குறிப்பிடத்தக்கது. ஆனால் திட்டங்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பொதுத் துறை உள்கட்டுமானத் திட்டங்களுக்கு எந்த ஒப்புதலும் முன்கூட்டிப் பெற வேண்டிய அவசியம் இல்லையாம்.
* மறு குடியேற்றத்துக்கான ஏற்பாடும், இழப்பீடும் வழங்கப்பட்ட பின்னர்தான் நிலம் கையகப்படுத்தும் பகுதியில் வசிப்போர் அங்கிருந்து வெளியேற்றப்படுவர்.
* விவசாயப் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும்போது, வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசுகள் கட்டுப்பாடு விதிக்க முடியும்.
* எதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு நிலத்தை மாநில அரசுகள் திருப்பி அளிக்கலாம்.
* இச்சட்டத்தின் படி, குறைந்தபட்சம் 12 மாதத்திற்கு முன்பாக நிலம் கையகப்படுத்துவதின் தேவையை தெரிவிக்கும் அறிவிப்பு வெளியிட வேண்டும். இச்சட்டத்தின் படி நிலம் கையகப்படுத்தும் காரணத்தையும் அதன் தேவையையும் 12 மாதங்களுக்கு முன்பாக நில உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

இவை அனைத்தும் தான் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாகும். இப்படி பல விதிமுறைகள் கோட்பாடுகள் நிறைந்திருந்தாலும் தங்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்காக, முழு கிராமங்களும், சமூகங்களும், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி வருகிறார்கள் என்பது கடந்த கால அனுபவம் ஆகும். இதன் விளைவாக இப்படி நிலம் கைப்பற்றப்படுவதற்கு எதிரான போராட்டமானது, நாட்டில் நடைபெறும் மிகக் கடுமையான போராட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பெருகி வருகின்ற மக்கள் தொகைக்குப் போதுமான உணவை உறுதி செய்யவும் கிராமப்புற மக்களுடைய வாழ்க்கைத் தரம் நிலையாக உயர்வதை உறுதி செய்யவும், வேளாண்மை ஒரு பக்கமும், தொழில்களும் சேவைகளும் மறு பக்கமும் வளர்ச்சி பெறும் தேவையையும் இந்த மசோதா முழுவதுமாக புறக்கணிக்கிறது. முதலாளித்துவ ஏகபோகங்கள் அதிகபட்ச இலாபம் ஈட்டுவதற்காக அவர்களுக்குத் தேவையான நிலங்களைக் கைப்பற்றுவதை உறுதி செய்வதே இந்தப் புதிய மசோதாவின் பின்னணியில் உள்ள நோக்கம் என கருதுகிறேன்.

முன்னதாக, அரசியலமைப்புச் சட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் எவ்வாறு வரையறுக்கப்பட்டது என்பதையும், மேற்கு வங்கம் நந்திகிராம், சிங்கூர் டாடா நானோ தொழிற்சாலை, ஒரிசா பாஸ்கோ தொழிற்சாலை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் பற்றியும், இதனால் என்னென்ன திட்டங்கள் முடங்கி கிடக்கிறது என்பதையும் அடுத்த பதிவில் பார்போம். மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு அவ்வப்போது அதை நினைவுபடுத்தித் கொண்டே இருப்பது நம்மை போன்றவர்களுடைய கடமை...நீங்கள் உங்கள் கடமையை ஆற்றி செல்லுங்கள் தோழர்களே...
நன்றியுடன்
 - P.இராஜா
மின்னஞ்சலில் பதிவுகளை பெற
*உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து இதை உறுதி செய்யவும்.*

Post Comment

1 உரமிடுபவர்கள்:

சீனு said...

என்ன சொன்னாலும் கடைசி பத்தியில் கூறினீர்களே அதுதான் நிதர்சனம்

  © www.uzhavan.com 2013

Back to TOP